தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே. |
1
|
அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே. |
2
|
அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே. |
3
|
அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமரை ஈறுகள் தாமே. |
4
|
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே. |
5
|
| Go to top |
அறிவறி வாக அறிந்தன்பு செய்மின்
அறிவறி வாக அறியும்அவ் வண்ணம்
அறிவறி வாக அணிமாதி சித்தி
அறிவறி வாக அறிந்தனன் நந்தியே. |
6
|
அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை அழகிய வாறே. |
7
|
அறிவறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது
அறிவாய வற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே. |
8
|
அறிவுடை யார்நெஞ் சகலிட மாவது
அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவது
அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே. |
9
|
மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே. |
10
|
| Go to top |
என்னை யறிகிலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடாது
என்னையிட் டென்னை உசாவுகின் றேனே. |
11
|
மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனற்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே. |
12
|
தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும்
நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி
பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே. |
13
|
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக வாரா பிறவியே. 15 |
14
|