பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. |
1
|
தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகர் திரிவார்
அவிழும் மனமும் ஆதி யருளும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே. |
2
|
புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே. |
3
|
முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. |
4
|
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடிற் சிவலோக மாமே. |
5
|
| Go to top |
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. |
6
|
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே. |
7
|
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. |
8
|
கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே. |
9
|
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல
வீடு மளவும் விடுகின் றிலேனே. 8 |
10
|
| Go to top |