கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென் றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த நல்லா னமையாள்வா னல்ல நகரானே.
|
1
|
தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத் துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக் கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும் நக்கன் னமையாள்வா னல்ல நகரானே.
|
2
|
அந்தி மதியோடு மரவச் சடைதாழ முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும் நந்தி நமையாள்வா னல்ல நகரானே.
|
3
|
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ மிளிரும் மரவோடு வெண்ணூ றிகழ்மார்பில் தளிருந் திருமேனித் தையல் பாகமாய் நளிரும் வயல்சூழ்ந்த நல்ல நகரானே.
|
4
|
மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித் துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த நணியா னமையாள்வா னல்ல நகரானே.
|
5
|
| Go to top |
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும் பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு நாசன் னமையாள்வா னல்ல நகரானே.
|
6
|
அங்கோல் வளைமங்கை காண வனலேந்திக் கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும் நங்கோ னமையாள்வா னல்ல நகரானே.
|
7
|
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால் எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி நண்ணார் புரமெய்தா னல்ல நகரானே.
|
8
|
நாகத் தணையானு நளிர்மா மலரானும் போகத் தியல்பினாற் பொலிய வழகாகும் ஆகத் தவளோடு மமர்ந்தங் கழகாரும் நாகம் மரையார்த்தா னல்ல நகரானே.
|
9
|
குறியில் சமணோடு குண்டர் வண்டேரர் அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும் நறைகொள் பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.
|
10
|
| Go to top |
நலமார் மறையோர்வாழ் நல்ல நகர்மேய கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.
|
11
|