அறையார்புனலு மாமலரு மாடரவார் சடைமேல் குறையார்மதியுஞ் சூடிமாதோர் கூறுடையா னிடமாம் முறையார்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம் வணங்கும் திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்றிருப் பூவணமே.
|
1
|
மருவார்மதின்மூன் றொன்றவெய்து மாமலையான் மடந்தை ஒருபால்பாக மாகச்செய்த வும்பர்பிரா னவனூர் கருவார்சாலி யாலைமல்கிக் கழன்மன்னர் காத்தளித்த திருவான்மலிந்த சேடர்வாழுந் தென்றிருப் பூவணமே.
|
2
|
போரார்மதமா வுரிவைபோர்த்துப் பொடியணி மேனியனாய்க் காரார்கடலி னஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவனூர் பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச் சீரார்வாரி சேரநின்ற தென்றிருப் பூவணமே.
|
3
|
கடியாரலங்கற் கொன்றைசூடிக் காதிலொர் வார்குழையன் கொடியார்வெள்ளை யேறுகந்த கோவணவன் னிடமாம் படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற் பரவச் செடியார்வைகை சூழநின்ற தென்றிருப் பூவணமே.
|
4
|
கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில் கூட்டழித்த போரார்வில்லி மெல்லியலாளோர் பான்மகிழ்ந் தானிடமாம் ஆராவன்பிற் றென்னர்சேரர் சோழர்கள் போற்றிசைப்பத் தேரார்வீதி மாடநீடுந் தென்றிருப் பூவணமே.
|
5
|
| Go to top |
நன்றுதீதென் றொன்றிலாத நான்மறை யோன்கழலே சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரா னிடமாம் குன்றிலொன்றி யோங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல் தென்றலொன்றி முன்றிலாருந் தென்றிருப் பூவணமே.
|
6
|
பைவாயரவ மரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப மெய்வாய்மேனி நீறுபூசி யேறுகந் தானிடமாம் கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியி னானெருங்கிச் செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்றிருப் பூவணமே.
|
7
|
மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக் கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையி னார்க்கிடமாம் பாடலோடு மாடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து ஓடிநீரால் வைகைசூழு முயர்திருப் பூவணமே.
|
8
|
பொய்யாவேத நாவினானும் பூமகள் காதலனும் கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரி யானவனூர் மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணி கொழித்துச் செய்யார்கமலந் தேனரும்புந் தென்றிருப் பூவணமே.
|
9
|
அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்பு செய்யா நிலையாவண்ண மாயம்வைத்த நின்மலன் றன்னிடமாம் மலைபோற்றுன்னி வென்றியோங்கு மாளிகை சூழ்ந்தயலே சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்றிருப் பூவணமே.
|
10
|
| Go to top |
திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்றிருப் பூவணத்துப் பெண்ணார்மேனி யெம்மிறையைப் பேரிய லின்றமிழால் நண்ணாருட்கக் காழிமல்கு ஞானசம்பந்தன் சொன்ன பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வது வானிடையே.
|
11
|