இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்- புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான் தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக் குரங்காடூதுறைக் கோலக் கபாலியே.
|
1
|
முத்தினை(ம்), மணியை, பவளத்து ஒளிர்- தொத்தினை, சுடர்சோதியை, சோலை சூழ் கொத்து அலர் குரங்காடுதுறை உறை அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே.
|
2
|
குளிர்புனல் குரங்காடுதுறையனை தளிர்நிறத் தையல் பங்கனை, தண்மதி ஒளியனை(ந்), நினைந்தேனுக்கு என் உள்ளமும் தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே.
|
3
|
மணவன் காண்; மலையாள் நெடு மங்கலக் கணவன் காண்; கலை ஞானிகள் காதல் எண்- குணவன் காண்; குரங்காடுதுறைதனில் அணவன் காண், அன்புசெய்யும் அடியர்க்கே.
|
4
|
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்; காலத்தான் உயிர் போக்கிய காலினன்; நீலத்து ஆர் மிடற்றான்; வெள்ளை நீறு அணி கோலத்தான் குரங்காடுதுறையனே.
|
5
|
| Go to top |
ஆட்டினான், முன் அமணரோடு என்தனை; பாட்டினான், தன பொன் அடிக்கு இன் இசை; வீட்டினான், வினை; மெய் அடியாரொடும் கூட்டினான் குரங்காடுதுறையனே.
|
6
|
மாத்தன்தான், மறையார் முறையால்; மறை- ஓத்தன்; தாருகன் தன் உயிர் உண்ட பெண் போத்தன்தான்; அவள் பொங்கு சினம் தணி கூத்தன்தான் குரங்காடுதுறையனே.
|
7
|
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்! ஆடுமின்(ன்)! அழுமின்! தொழுமின்(ன்)! அடி பாடுமின்! பரமன் பயிலும்(ம்) இடம், கூடுமின், குரங்காடுதுறையையே!
|
8
|
தென்றல் நன்நெடுந்தேர் உடையான் உடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்; அன்று அவ் அந்தகனை அயில்சூலத்தால் கொன்றவன் குரங்காடுதுறையனே.
|
9
|
நல்-தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் உற்ற நல்மொழியால் அருள்செய்த நல் கொற்றவன் குரங்காடுதுறை தொழ, பற்றும் தீவினை ஆயின பாறுமே.
|
10
|
| Go to top |
கடுத்த தேர் அரக்கன் கயிலை(ம்) மலை எடுத்த தோள்தலை இற்று அலற(வ்) விரல் அடுத்தலும்(ம்), அவன் இன் இசை கேட்டு அருள் கொடுத்தவன் குரங்காடுதுறையனே.
|
11
|