சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருவெண்பாக்கம் (பூண்டி)
7.089   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பிழை உளன பொறுத்திடுவர் என்று
பண் - சீகாமரம்   (திருவெண்பாக்கம் (பூண்டி) வெண்பாக்கத்தீசுவரர் கனிவாய்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=PUUgVgbSok0

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.089   பிழை உளன பொறுத்திடுவர் என்று  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருவெண்பாக்கம் (பூண்டி) ; (திருத்தலம் அருள்தரு கனிவாய்மொழியம்மை உடனுறை அருள்மிகு வெண்பாக்கத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
திருவாரூர் செல்லும் உறுதியோடு நடந்தார். உடன் வருவோர் வழி காட்ட, வடதிருமுல்லைவாயிலைத் தொழுது அங்குத் திருப்பதிகம் பாடிப் பரவி, திருவெண்பாக்கம் என்ற ஊரினை அடைந்தார். தொண்டர்கள் எதிர்கொள்ளச் சென்று திருவெண்பாக்கத் திறைவரை வழிபட்டுத், தேவரீர் மகிழும் இத்திருக்கோயிலினுள் இருக்கின்றீரோ என்று விண்ணப்பம் செய்ய, பெருமானும் ஊன்று கோல் ஒன்று கொடுத்து, உளோம் போகீர் என்று கூறியருளினார். நம்பிகளும், பிழையுளன பொறுத்திடுவர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
குழை விரவு வடி காதா! கோயில் உளாயே! என்ன,
உழை உடையான் உள் இருந்து, உளோம்; போகீர்! என்றானே!

[1]
இடை அறியேன்; தலை அறியேன்; எம்பெருமான், சரணம்! என்பேன்;
நடை உடையன், நம் அடியான்; என்று அவற்றைப் பாராதே,
விடை உடையான், விடநாகன், வெண்நீற்றன், புலியின்தோல்-
உடை உடையான், எனை உடையான், உளோம்; போகீர்! என்றானே!

[2]
செய் வினை ஒன்று அறியாதேன்; திருவடியே சரண் என்று
பொய் அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ?
பை அரவா! இங்கு இருந்தாயோ? என்ன, பரிந்து என்னை
உய்ய அருள் செய்ய வல்லான், உளோம், போகீர்! என்றானே!

[3]
கம்பு அமரும் கரி உரியன்; கறைமிடற்றன்; காபாலி;
செம்பவளத்திரு உருவன்; சேயிழையோடு உடன் ஆகி,
நம்பி இங்கே இருந்தீரே! என்று நான் கேட்டலுமே,
உம்பர் தனித்துணை எனக்கு, உளோம்; போகீர்! என்றானே!

[4]
பொன் இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல் பொலிந்து இலங்க,
மின் இலங்கு நுண் இடையாள் பாகமா, எருது ஏறி,
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த, அடியேனும்
உன்ன தம் ஆய்க் கேட்டலுமே, உளோம் போகீர்! என்றானே!

[5]
கண் நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர்,
தெண்நிலவு, செஞ்சடைமேல் தீ மலர்ந்த கொன்றையினான்;
கண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ? என்ன,
ஒண்நுதலி பெருமானார், உளோம்; போகீர்! என்றானே!

[6]
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்யத்
தார் நிலவு நறுங்கொன்றைச் சடையனார்; தாங்க(அ)ரிய
கார் நிலவு மணிமிடற்றீர்! இங்கு இருந்தீரே? என்ன,
ஊர் அரவம் அரைக்கு அசைத்தான், உளோம்; போகீர்; என்றானே!

[7]
வார் இடம் கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி,
கார் இடம் கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி-
யூர் இடம் கொண்டு இருந்த பிரான், உளோம்; போகீர்! என்றானே!

[8]
பொன் நவிலும் கொன்றையினாய்! போய் மகிழ்க்கீழ் இரு! என்று
சொன்ன எனைக் காணாமே, சூளுறவு மகிழ்க்கீழே
என்ன வல்ல பெருமானே! இங்கு இருந்தாயோ? என்ன,
ஒன்னலரைக் கண்டால் போல், உளோம்; போகீர்! என்றானே!

[9]
மான் திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள் எல்லாம்
தோன்ற அருள் செய்து அளித்தாய் என்று உரைக்க, உலகம் எலாம்
ஈன்றவனே! வெண்கோயில் இங்கு இருந்தாயோ? என்ன,
ஊன்றுவது ஓர் கோல் அருளி, உளோம்; போகீர்! என்றானே!

[10]
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட
கார் ஆரும் மிடற்றானைக் காதலித்திட்டு, அன்பினொடும்
சீர் ஆரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா, வல்வினைதானே.

[11]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000