சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7.092   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
பண் - குறிஞ்சி   (திருப்புக்கொளியூர் (அவிநாசி) அவிநாசியப்பர் பெருங்கருணைநாயகி)
Audio: https://sivaya.org/audio/7.092 Etraal Marakkaen.mp3
Audio: https://www.youtube.com/watch?v=s_4KMZXZ-Bw

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.092   எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருப்புக்கொளியூர் (அவிநாசி) ; (திருத்தலம் அருள்தரு பெருங்கருணைநாயகி உடனுறை அருள்மிகு அவிநாசியப்பர் திருவடிகள் போற்றி )
திருவாரூர்ப் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து, கொங்குநாட்டை யடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார். அதுகேட்ட வேதியர்கள் நிகழ்ந்ததைக் கூறினர். ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப்பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்தபோது ஒருவனை முதலை விழுங்கியது. மற்றொருவன் பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. இவர்கள் வீட்டில் எழும் மங்கல ஒலி முதலை வாயில் அகப்பட்டிறந்த சிறுவனுடைய பெற்றோர்க்கு, புதல்வனை நினைப்பித்தமையால் அவர்கள் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்ட சுந்தரர் வேதனைகொண்டார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரர் வருகையை அறிந்து முகமலர்ச்சியோடு வரவேற்றனர். இவர்கள் புதல்வனை முதலைவாயினின்று அழைத்துத் தந்த பின்னரே அவிநாசிப் பெரு மானை வழிபடவேண்டுமென்று உறுதிகொண்டார். அம் மடு இருக்கு மிடத்தைக் கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டுவந்து தரும்படி அருள் செய்க என இறைவனை வேண்டி, எற்றான் மறக்கேன் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினார். உரைப்பார் உரை என்னும் நான்காம் திருப்பாடலைப் பாடும்பொழுது இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றுள் புதல்வன் உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சி யுடையதாகச் செய்து புகுத்தினன். முதலை கரையிலே வந்து தான் முன் விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தழுவியெடுத்தாள். தாயும் தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினர். இந் நிகழ்ச்சியைக் கண்டோர் அனைவரும் திரு வருள் திறத்தை வியந்தனர். சுந்தரர் சிறுவனை அவிநாசித் திருக் கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவரைத் தொழுது வேதியர் வீட்டிற்கு வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க உபநயனம் செய்வித் தருளினார்
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே

[1]
வழி போவார் தம்மோடும் வந்து உடன் கூடிய மாணி-நீ
ஒழிவது அழகோ? சொல்லாய்! அருள், ஓங்கு சடையானே!-
பொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை
இழியாக் குளித்த மாணி-என்னைக் கிறி செய்ததே?

[2]
எங்கேனும் போகினும், எம்பெருமானை, நினைந்தக்கால்,
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை;
பொங்கு ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே!
எம் கோனே! உனை வேண்டிக்கொள்வேன், பிறவாமையே.

[3]
உரைப்பார் உரை உகந்து, உள்க வல்லார் தங்கள் உச்சியாய்!
அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!-
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு, காலனையே!

[4]
அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு; அது அன்றியும்,
சரம்-கோலை வாங்கி, வரிசிலை நாணியில் சந்தித்து,
புரம் கோட எய்தாய்-புக்கொளியூர் அவிநாசியே!
குரங்கு ஆடு சோலைக் கோயில் கொண்ட குழைக்காதனே.

[5]
நாத்தானும் உனைப் பாடல் அன்றி நவிலாது எனா,
சோத்து! என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்!
பூத் தாழ்சடையாய்! புக்கொளியூர் அவிநாசியே!
கூத்தா!-உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே!

[6]
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி, மலைப்புறம்
சந்திகள்தோறும் சலபுட்பம் இட்டு வழிபட,
புந்தி உறைவாய்! புக்கொளியூர் அவிநாசியே!
நந்தி உனை வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே

[7]
பேணாது ஒழிந்தேன், உன்னை அலால் பிற தேவரை;
காணாது ஒழிந்தேன்; காட்டுதியேல் இன்னம் காண்பன், நான்;-
பூண் நாண் அரவா! புக்கொளியூர் அவிநாசியே!
காணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே!

[8]
நள்ளாறு, தெள்ளாறு, அரத்துறைவாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய், வேங்கையின் தோலை விரும்பினாய்!-
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை
உள் ஆடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே?

[9]
நீர் ஏற ஏறும் நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை-
போர் ஏறு அது ஏறியை, புக்கொளியூர் அவிநாசியை,
கார் ஏறு கண்டனை,-தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை, துன்பமே.

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000