![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.092
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பட்டம், பால்நிற மதியம், படர் பண் - பியந்தைக்காந்தாரம் (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nu1wdo_PEPE |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.092  
பட்டம், பால்நிற மதியம், படர்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு வர்த்தமானீசுவரர் திருவடிகள் போற்றி )
பட்டம், பால்நிற மதியம், படர் சடைச் சுடர் விடு பாணி, நட்டம் நள் இருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில், புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர், தொண்டர் போற்றி வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சுரத்தாரே. | [1] |
முயல் வளாவிய திங்கள் வாள்முகத்து அரிவையில் தெரிவை இயல் வளாவியது உடைய இன் அமுது, எந்தை, எம்பெருமான் கயல் வளாவிய கழனிக் கருநிறக்குவளைகள் மலரும் வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சுரத்தாரே. | [2] |
தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும் கொண்டு கொண்டு அடி பரவி, குறிப்பு அறி முருகன் செய் கோலம் கண்டு கண்டு, கண் குளிரக் களி பரந்து, ஒளி மல்கு கள் ஆர் வண்டு பண் செயும் புகலூர் வர்த்த மானீச் சுரத்தாரே. | [3] |
பண்ண வண்ணத்தர் ஆகி, பாடலொடு ஆடல் அறாத விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர், ஒர்பாகம் பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு, ஆண் இணைபிணைந்த வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சுரத்தாரே. | [4] |
ஈசன், ஏறு அமர் கடவுள், இன் அமுது, எந்தை, எம்பெருமான், பூசும் மாசு இல் வெண் நீற்றர் பொலிவு உடைப் பூம் புகலூரில், மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடிமேல் வாசமாமலர் உடையார், வர்த்தமானீச்சுரத்தாரே. | [5] |
தளிர் இளங் கொடி வளர, தண்கயம் இரிய வண்டு ஏறிக் கிளர் இளம்(ம்) உழை நுழைய, கிழிதரு பொழில் புகலூரில், உளர் இளஞ் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் வளர் இளம்பிறை உடையார் வர்த்தமானீச்சுரத்தாரே. | [6] |
தென் சொல், விஞ்சு அமர் வட சொல், திசை மொழி, எழில் நரம்பு எடுத்துத் துஞ்சு நெஞ்சு இருள் நீங்கத் தொழுது எழு தொல் புகலூரில், அஞ்சனம் பிதிர்ந்தனைய, அலைகடல் கடைய அன்று எழுந்த, வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சுரத்தாரே. | [7] |
சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத் தசமுகன் பரவும் நாம தேயம் அது உடையார், நன்கு உணர்ந்து, அடிகள் என்று ஏத்த; காம தேவனை வேவக் கனல் எரி கொளுவிய கண்ணார்; வாம தேவர் தண் புகலூர் வர்த்தமானீச் சுரத்தாரே. | [8] |
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு நாரணன் கருத்து அழிய நகை செய்த சடை முடி நம்பர்; ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து, அருளுதல் பொருட்டால், வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சுரத்தாரே. | [9] |
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையினால் தம் மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் என விரும்பேல்! செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர், மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சுரத்தாரே. | [10] |
பொங்கு தண்புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில், மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சுரத்தாரை, தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ்பத்தும் எங்கும் ஏத்த வல்லார்கள், எய்துவர், இமையவர் உலகே. | [11] |