சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம்
7.048   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நமச்சிவாய பதிகம், மற்றுப் பற்று எனக்கு இன்றி,
பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் கொடுமுடிநாதர் பண்மொழியாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=llZiPGBTX5g
Audio: https://www.youtube.com/watch?v=y6YX15hV58I

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.048   நமச்சிவாய பதிகம், மற்றுப் பற்று எனக்கு இன்றி,  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் ; (திருத்தலம் அருள்தரு பண்மொழியாளம்மை உடனுறை அருள்மிகு கொடுமுடிநாதர் திருவடிகள் போற்றி )
இறைவர் சுந்தரர் வேண்டியவாறே பெரும் பொருட்குவியலை வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர், அத்தலத்தினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞ்லி, ஈங்கோய்மலை முதலிய தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்குநாட்டை அடைந்தார். காவிரிக்குத் தென்கரையில் உள்ள கறையூர்த்திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் திருக்கோயிலை இறைஞ்சி மற்றுப்பற்றெனக்கின்றி யென்னும் நமச்சிவாயத் திருப்பதிகம்பாடிப் போற்றினார்.
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[1]
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன்; கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[2]
ஓவு நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி
நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[3]
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன் மாமணி,
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை,
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[4]
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
அஞ்சல்! என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல் அடிப் பாவை மார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[5]
ஏடு வான் இளந்திங்கள் சூடினை; என், பின்? கொல் புலித் தோலின் மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி
சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[6]
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன;
நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டு இடை
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[7]
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்கோட்டிடை
கொம்பின் மேல் குயில் கூவ, மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[8]
சாரணன், தந்தை, எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன், மாமணி என்று
பேர் எண் ஆயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
நாரணன், பிரமன், தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

[9]
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்பு இ (ல்)லியை,
பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரை-
நாணனை, தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே.

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000