சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
1.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துணி வளர் திங்கள் துளங்கி
பண் - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ieof1SKHvNQ
7.014   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வைத்தனன் தனக்கே, தலையும் என்
பண் - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XOG7u08TkQY

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.044   துணி வளர் திங்கள் துளங்கி  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) ; (திருத்தலம் அருள்தரு பாலசுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாற்றறிவரதர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.
இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம்
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

[1]
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்;
தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன,
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

[2]
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து;
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?

[3]
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி
புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
வனமலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

[4]
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து,
மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி,
ஆந்தைவிழிச் சிறு பூதத்தார் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?

[5]
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,
ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

[6]
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை,
கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன,
அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?

[7]
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?

[8]
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால்,
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?

[9]
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா;
ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?

[10]
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.014   வைத்தனன் தனக்கே, தலையும் என்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) ; (திருத்தலம் அருள்தரு பாலசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு மாற்றறிவரதர் திருவடிகள் போற்றி )
பின்னர் காவிரியின் இருமருங்குமுள்ள தலங்களை வழிபட விரும்பித் திருவானைக்காவை யடைந்தார். இறைவனை வழிபட்டு, அங்கிருந்து திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்து தமக்குப் பொன்னைத் தந்தருள வேண்டுமென்னும் குறிப்புடன் பெருமானை வணங்கினார். இறைவன் பொன்னைத் தந்தருளாமையால் இறைவன் பால் மனப்புழுக்கம் கொண்டு, வைத்தனன் தனக்கே என்று தொடங்கிப் பதிகம் பாடி, இவரலாதில்லையோ பிரானார் என இகழ்ந்து கூறிப் பின் அதனையே பொறுத்தருளவேண்டுமென்று திருக்கடைக் காப்பும் அருளிச்செய்தார்.
வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்; வஞ்சம் ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால், உவமனே ஒக்கும்;
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பித்தரே ஒத்து ஓர் நச்சிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[1]
அன்னையே! என்னேன்; அத்தனே! என்னேன்; அடிகளே அமையும் என்று இருந்தேன்;
என்னையும், ஒருவன் உளன் என்று கருதி, இறை இறை திரு அருள் காட்டார்;
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள்
பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[2]
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; உள்ளமே அமையும் என்று இருந்தேன்;
செற்றவர் புரம் மூன்று எரி எழச் செற்ற, செஞ்சடை, நஞ்சு அடை கண்டர்,
அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும்,
பெற்ற போது உகந்து, பெறாவிடில் இகழில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.

[3]
நாச் சில பேசி, நமர் பிறர் என்று, நன்று தீது என்கிலர்; மற்று ஓர்
பூச்சு இலை; நெஞ்சே! பொன் விளை கழனிப் புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கைப்
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர் தாம் பலரையும் ஆட்கொள்வர்; பரிந்து ஓர்
பேச்சு இலர்; ஒன்றைத் தர இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[4]
வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும்,
புரிந்த அந் நாளே புகழ் தக்க; அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகிப்
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும்,
பிரிந்து இறைப் போதில் பேர்வதே ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[5]
செடித் தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்; தீவினை செற்றிடும் என்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்; ஆவதும் அறிவர், எம் அடிகள்;
படைத்தலைச் சூலம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்,
பிடித்த வெண்நீறே பூசுவது ஆனால், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[6]
கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை; கட்டங்கம் ஏந்திய கையர்;
மெய்யது புரிநூல்; மிளிரும் புன்சடை மேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர்;
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்;
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.

[7]
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன்; நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்;
கணம் படிந்து ஏத்தி, கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன்;
பணம் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்,
பிணம் படு காட்டில் ஆடுவது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.

[8]
குழைத்து வந்து ஓடிக் கூடுதி, நெஞ்சே! குற்றேவல் நாள்தொறும் செய்வான்;
இழைத்த நாள் கடவார்; அன்பிலரேனும், எம்பெருமான்! என்று எப்போதும்
அழைத்தவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும்,
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.

[9]
துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில்,
மணிப் படு கண்டனை வாயினால் கூறி, மனத்தினால்-தொண்டனேன் நினைவேன்;
பணிப் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்,
பிணிப்பட ஆண்டு, பணிப்பு இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[10]
ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்; அடியவர்க்கு அடியனும் ஆனேன்;
உரிமையால் உரியேன்; உள்ளமும் உருகும்; ஒண் மலர்ச் சேவடி காட்டாய்;
அருமை ஆம் புகழார்க்கு அருள் செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள்,
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[11]
ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; எம்பெருமான்! என்று எப்போதும்
பாயின புகழான், பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழப் பல்-நாள்
வாயினால் கூறி மனத்தினால் நினைவான், வள வயல் நாவல் ஆரூரன்,
பேசின பேச்சைப் பொறுக்கிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

[12]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000