![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
| Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
| திருமுறை thalam திருப்பந்தணைநல்லூர் |
|
3.121
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; பண் - புறநீர்மை (திருப்பந்தணைநல்லூர் ) Audio: https://www.youtube.com/watch?v=X4yCT_uyCfI |
|
6.010
திருநாவுக்கரசர்
தேவாரம்
நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல் பண் - திருத்தாண்டகம் (திருப்பந்தணைநல்லூர் பசுபதீசுவரர் காம்பன்னதோளியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=rBP-WYYMCq4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.121  
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;
பண் - புறநீர்மை (திருத்தலம் திருப்பந்தணைநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
|
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; இவை சொல்லி லகு எழுந்து ஏத்த, கடறினார் ஆவர்; காற்று உளார் ஆவர்; காதலித்து உறைதரு கோயில் கொடிறனார்; யாதும் குறைவு இலார்; தாம் போய்க் கோவணம் கொண்டு கூத்து ஆடும் படிறனார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [1] |
|
கழி உளார் எனவும், கடல் உளார் எனவும், காட்டு உளார்:, நாட்டு உளார் எனவும், வழி உளார் எனவும், மலை உளார் எனவும், மண் உளார், விண் உளார் எனவும், சுழி உளார் எனவும், சுவடு தாம் அறியார், தொண்டர் வாய் வந்தன சொல்லும் பழி உளார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [2] |
|
காட்டினார் எனவும், நாட்டினார் எனவும், கடுந் தொழில் காலனைக் காலால் வீட்டினார் எனவும், சாந்த வெண்நீறு பூசி, ஓர் வெண்மதி சடைமேல் சூட்டினார் எனவும், சுவடு தாம் அறியார், சொல் உள சொல்லும் நால்வேதப்- பாட்டினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [3] |
|
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த, மொய்த்த பல்கணங்களின் துயர் கண்டு உருகினார் ஆகி, உறுதி போந்து, உள்ளம் ஒண்மையால், ஒளி திகழ் மேனி கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த, கடலுள் நஞ்சு அமுதமா வாங்கிப் பருகினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [4] |
|
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூணநூல் புரள, மின்னின் ஆர் உருவின், மிளிர்வது ஓர் அரவம், மேவு வெண்நீறு மெய் பூசி, துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி, தொன்மை ஆர் தோற்றமும் கேடும் பன்னினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [5] |
|
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க! எனவும் உமையவள் கணவன் வாழ்க! எனவும், அண்பினார், பிரியார், அல்லும் நன்பகலும், அடியவர் அடி இணை தொழவே, நண்பினார் எல்லாம், நல்லர்! என்று ஏத்த, அல்லவர், தீயர்! என்று ஏத்தும் பண்பினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [6] |
|
எற்றினார், ஏதும் இடைகொள்வார் இல்லை, இருநிலம் வான் உலகு எல்லை தெற்றினார் தங்கள் காரணம் ஆகச் செரு மலைந்து, அடி இணை சேர்வான், முற்றினார் வாழும் மும்மதில் வேவ, மூஇலைச்சுலமும் மழுவும் பற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [7] |
|
ஒலிசெய்த குழலின் முழவம் அது இயம்ப, ஓசையால் ஆடல் அறாத கலி செய்த பூதம் கையினால் இடவே, காலினால் பாய்தலும், அரக்கன் வலி கொள்வர்; புலியின் உரி கொள்வர்; ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் பலி கொள்வர்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [8] |
|
சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால், இவர் இருகூறாத் தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும் பெருமையும் தம்மில் சாற்றினார், சாற்றி, ஆற்றலோம் என்ன, சரண் கொடுத்து, அவர் செய்த பாவம் பாற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [9] |
|
கல் இசை பூணக் கலை ஒலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில் நல் இசையாளன், புல் இசை கேளா நல்-தமிழ் ஞானசம்பந்தன், பல் இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் சொல் இசைப்பாடல் பத்தும் வல்லவர் மேல், தொல்வினை சூழகிலாவே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.010  
நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்பந்தணைநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு காம்பன்னதோளியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி )
|
நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்; பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி;பிறை சூடும் சடைமேல் ஓர் புனலும் சூடி; ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்;அனல் கொண்டார்;அந்திவாய் வண்ணம் கொண்டார்; பாதம் கம் நீறு ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [1] |
|
காடு அலால் கருதாதார்;கடல்நஞ்சு உண்டார்;களிற்று உரிவை மெய் போர்த்தார்;கலன் அது ஆக; ஓடு அலால் கருதாதார்;ஒற்றியூரார்;உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக் கண்ணால் பீடு உலாம் தனை செய்வார்;பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி, குழலும், ஓங்கப் பாடலார்;ஆடலார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [2] |
|
பூதப்படை உடையார்;பொங்கு நூலார்; புலித்தோல் உடையினார்;போர் ஏற்றி(ன்)னார்; வேதத்தொழிலார் விரும்ப நின்றார்; விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி, ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார்; உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டு பாதத்தொடு கழலார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [3] |
|
நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்; நெருப்பு ஏற்றார், அங்கையில் நிறையும் ஏற்றார்; ஊர் எலாம் பலி ஏற்றார்;அரவம் ஏற்றார்; ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்; வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்; மழு ஏற்றார்;மான்மறி ஓர் கையில் ஏற்றார்; பார் உலாம் புகழ் ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [4] |
|
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்; துளங்கா மணி முடியார்; தூய நீற்றார்; இண்டைச் சடை முடியார்; ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார், ஏமம் தோறும்; அண்டத்துக்கு அப் புறத்தார்; ஆதி ஆனார்; அருக்கனாய், ஆர் அழல் ஆய், அடியார்மேலைப் பண்டை வினை அறுப்பார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [5] |
|
கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்; கானப்பேர் காதலார்; காதல்செய்து மடம் மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார்; மான் உரி தோல் மிசைத்தோளார்; மங்கை காண நடம் மன்னி ஆடுவார்; நாகம் பூண்டார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; படம் மன்னு திருமுடியார்; பைங்கண்ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [6] |
|
முற்றா மதிச் சடையார்; மூவர் ஆனார்; மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்; கற்றார்பரவும்கழலார்;திங்கள்,கங்கையாள்,காதலார்; காம்புஏய்தோளி பற்று ஆகும் பாகத்தார்; பால் வெண் நீற்றார்; பான்மையால் ஊழி, உலகம், ஆனார்; பற்றார் மதில் எரித்தார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [7] |
|
கண் அமரும் நெற்றியார்; காட்டார்; நாட்டார்; கன மழுவாள் கொண்டது ஓர் கையார்; சென்னிப் பெண் அமரும் சடைமுடியார்; பேர் ஒன்று இல்லார்; பிறப்பு இலார்; இறப்பு இலார்; பிணி ஒன்று இல்லார்; மண்ணவரும், வானவரும், மற்றையோரும், மறையவரும், வந்து எதிரே வணங்கி ஏத்தப் பண் அமரும் பாடலார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [8] |
|
ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்; இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்; நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு உண்டார்; அங்கை அனலும் உண்டார்; ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்; பாறு ஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [9] |
|
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்; காரோணம் காதலார்; காதல்செய்து நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள் அரக்கர்கோன் தலையை மாளச் செற்று, பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. | [10] |