சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.023   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மடையில் வாளை பாய, மாதரார் குடையும்
பண் - தக்கராகம்   (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
Audio: https://sivaya.org/audio/1.023 Madaiyil Vaalai.mp3
Audio: https://www.youtube.com/watch?v=C9dg_z7o0uY
7.062   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   புற்றில் வாள் அரவு ஆர்த்த
பண் - தக்கேசி   (திருக்கோலக்கா சத்தபுரீசுவரர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=yDMZAuDSaZQ

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.023   மடையில் வாளை பாய, மாதரார் குடையும்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருக்கோலக்கா ; (திருத்தலம் அருள்தரு ஓசைகொடுத்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தபுரீசர் திருவடிகள் போற்றி )
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று மடையில் வாளை எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
நல்ல தாளம், இசை கை வர
மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

[1]
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே,
உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.

[2]
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.

[3]
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,
குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!

[4]
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்க, பறையும், பாவமே.

[5]
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!

[6]
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

[7]
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

[8]
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!

[9]
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.

[10]
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.062   புற்றில் வாள் அரவு ஆர்த்த  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருக்கோலக்கா ; (திருத்தலம் அருள்தரு ஓசைகொடுத்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை; பூதநாதனை; பாதமே தொழுவார்
பற்று வான்துணை; எனக்கு எளி வந்த பாவநாசனை; மேவ(அ)ரியானை;
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் பொன்ற, வென்றி மால்வரை அரி அம்பா,
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

[1]
அங்கம் ஆறும் மாமறை ஒரு நான்கும் ஆய நம்பனை, வேய் புரை தோளி
தங்கு மா திரு உரு உடையானை, தழல் மதி(ச்) சடைமேல் புனைந்தானை,
வெங் கண் ஆனையின் ஈர் உரியானை, விண் உளாரொடு மண் உளார் பரசும்,
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

[2]
பாட்டு அகத்து இசை ஆகி நின்றானை, பத்தர் சித்தம் பரிவு இனியானை,
நாட்டு அகத்தேவர் செய்கை உளானை, நட்டம் ஆடியை, நம் பெருமானை,
காட்டு அகத்து உறு புலி உரியானை, கண் ஓர் மூன்று உடை அண்ணலை, அடியேன்
கோட்டகப் புனல் ஆர் செழுங் கழனிக் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

[3]
ஆத்தம் என்று எனை ஆள் உகந்தானை, அமரர் நாதனை, குமரனைப் பயந்த
வார்த் தயங்கிய முலை மடமானை வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்தனை, சிவனை, செழுந்தேனை, தில்லை அம்பலத்துள்-நிறைந்து ஆடும்
கூத்தனை, குரு மா மணி தன்னை, கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

[4]
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன், ஆள் அது ஆக! என்று ஆவணம் காட்டி,
நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள்-தொத்தினை; முத்திக்கு
ஒன்றினான் தனை; உம்பர் பிரானை; உயரும் வல் அரணம் கெடச் சீறும்
குன்ற வில்லியை மெல்லியல் உடனே கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

[5]
காற்றுத் தீப் புனல் ஆகி நின்றானை, கடவுளை, கொடு மால் விடையானை,
நீற்றுத் தீ உரு ஆய் நிமிர்ந்தானை, நிரம்பு பல் கலையின் பொருளாலே
போற்றித் தன் கழல் தொழுமவன் உயிரைப் போக்குவான் உயிர் நீக்கிடத் தாளால்
கூற்றைத் தீங்கு செய் குரை கழலானை, கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

[6]
அன்று அயன் சிரம் அரிந்து, அதில் பலி கொண்டு, அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை;
துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை; சுடர் போல் ஒளியானை;
மின்தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை; வாசம் மா முடிமேல்
கொன்றை அம் சடைக் குழகனை; அழகு ஆர் கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

[7]
நாளும் இன் இசையால்-தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை; என் மனக் கருத்தை;
ஆளும் பூதங்கள் பாட, நின்று ஆடும் அங்கணன் தனை; எண் கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெருங்கோயில் உள்ளானை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

[8]
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை,
பரக்கும் பார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை,
சிரக் கண் வாய் செவி மூக்கு உயர் காயம்-ஆகித் தீவினை தீர்த்த எம்மானை,
குரக்கு இனம் குதி கொண்டு உகள் வயல் சூழ் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

[9]
கோடரம் பயில் சடை உடைக் கரும்பை, கோலக் காவுள் எம்மானை, மெய்ம் மானப்
பாடர் அம் குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்-
நாடு இரங்கி முன் அறியும் அந் நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர்
காடு அரங்கு என நடம் நவின்றான் பால் கதியும் எய்துவர்; பதி அவர்க்கு அதுவே .

[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam lang tamil string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE