சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.052   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,
பண் - சீகாமரம்   (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=eEm_TSZsC4g
3.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=N14WKJRXAM8

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.052   கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருக்கோட்டாறு ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு ஐராபதேசுவரர் திருவடிகள் போற்றி )
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார்
அதிர்கின்ற பூம்பொழில்
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை, உள்கி, இணை அடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்
வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான் ஊடே

[1]
நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி, நீரொடும் மலர் வேண்டி, வான் மழை
குன்றில் நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி, வான் அரசு ஆள வல்லவர்
பொன்றும் ஆறு அறியார்; புகழ் ஆர்ந்த புண்ணியரே.

[2]
விரவி நாளும் விழா இடைப் பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய,
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில்,
அரவம் நீள்சடையானை உள்கி நின்று, ஆதரித்து, முன் அன்பு செய்து, அடி
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே.

[3]
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகைக்
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில்,
நம்பனே! நடனே! நலம் திகழ் நாதனே! என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே.

[4]
பழைய தம் அடியார் துதிசெய, பார் உளோர்களும் விண் உளோர் தொழ,
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில்,
கழலும் வண் சிலம்பும்(ம்) ஒலி செய, கான் இடைக் கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார், அணி ஆவர், வானவர்க்கே.

[5]
பஞ்சின் மெல் அடி மாதர், ஆடவர், பத்தர், சித்தர்கள், பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில்,
மஞ்சனே! மணியே! மணிமிடற்று அண்ணலே! என உள் நெகிழ்ந்தவர்,
துஞ்சும் ஆறு அறியார்; பிறவார், இத் தொல் நிலத்தே.

[6]
கலவ மா மயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்,
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா! என உன்னுவார் அவர்
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே.

[7]
வண்டல் ஆர் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட, வார் புனல் திரை
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில்
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே! கழலால் அரக்கனை
மிண்டு எலாம் தவிர்த்து, என், உகந்திட்ட வெற்றிமையே?

[8]
கருதி வந்து அடியார் தொழுது எழ, கண்ணனோடு அயன் தேட, ஆனையின்
குருதி மெய் கலப்ப உரி கொண்டு, கோட்டாற்றில்,
விருதினால் மடமாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி, வெள்
எருது உகந்தவனே! இரங்காய், உனது இன் அரு

[9]
உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர்,
கொடை இலார் மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில்,
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனை
அடைகிலாத வண்ணம்? அருளாய், உன் அடியவர்க்கே!

[10]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.012   வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருக்கோட்டாறு ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு ஐராபதேசுவரர் திருவடிகள் போற்றி )
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.

[1]
ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள், இமவான்மகள்
பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆல நிழல் கீழ் இருந்து, அறம் சொன்ன அழகனே.

[2]
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும், இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய(ம்) மணிகண்டனும்
குலை மல்கு தண்பொழில் சூழ்ந்து, அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அலை மல்கு வார்சடை ஏற்று உகந்த அழகன் அன்றே!

[3]
ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்) உமைபங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்,
தேன் அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தான் அமரும் விடையானும், எங்கள் தலைவன் அன்றே!

[4]
வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும்,
செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.

[5]
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா,
வெந்து அமரும் பொடிப் பூச வல்ல விகிர்தன், மிகும்
கொந்து அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அந்தணனை, நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[6]
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்வண்ணனும்,
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
தெண்திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே!

[7]
இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,
கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-
குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.

[8]
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை,
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்-நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!

[9]
கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள்
கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.

[10]
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை,
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-
படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam lang tamil string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81