சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.008   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடை உடையானும், நெய் ஆடலானும்,
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dbrDf_aphe0
4.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொள்ளத்த காயம் ஆய பொருளினை,
பண் - சாளரபாணி   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9UeX47SUCUY
Audio: https://www.youtube.com/watch?v=mAbV4GbLfL8
4.107   திருநாவுக்கரசர்   தேவாரம்   மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த
பண் - திருவிருத்தம்   (திருக்கடவூர் வீரட்டம் பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Koeyeluippo
5.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   மலைக் கொள் ஆனை மயக்கிய
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=b3bfnHioldc
7.028   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொடி ஆர் மேனியனே! புரி
பண் - நட்டராகம்   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=07d-sVIMhb4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.008   சடை உடையானும், நெய் ஆடலானும்,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருக்கடவூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு அபிராமியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருவடிகள் போற்றி )
சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண-
உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும்,
கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள்
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே?

[1]
எரிதரு வார்சடையானும்; வெள்ளை எருது ஏறியும்;
புரிதரு மா மலர்க்கொன்றை மாலை புனைந்து, ஏத்தவே,
கரிதரு காலனைச் சாடினானும் கடவூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே?

[2]
நாதனும், நள் இருள் ஆடினானும், நளிர்போதின்கண்
பாதனும், பாய் புலித்தோலினானும், பசு ஏறியும்,
காதலர் தண் கடவூரினானும், கலந்து ஏத்தவே
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே?

[3]
மழு அமர் செல்வனும்; மாசு இலாத பலபூதம் முன்
முழவு, ஒலி யாழ், குழல், மொந்தை கொட்ட, முதுகாட்டு இடைக்
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர் தனுள்
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே?

[4]
சுடர் மணிச் சுண்ணவெண் நீற்றினானும், சுழல்வு ஆயது ஓர்
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும்,
கடம் அணி மா உரித் தோலினானும், கடவூர்தனுள்
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே?

[5]
பண் பொலி நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
உண் பலி கொண்டு உழல்வானும்; வானின்(ன்) ஒளி மல்கிய,
கண் பொலி நெற்றி, வெண்திங்களானும்; கடவூர்தனுள்
வெண்பொடிபூப்சியும் வீரட்டானத்து அரன் அல்லனே?

[6]
செவ் அழல் ஆய், நிலன் ஆகி, நின்ற சிவமூர்த்தியும்;
முவ் அழல், நால்மறை, ஐந்தும், ஆய முனிகேள்வனும்;
கவ்வு அழல் வாய்க் கதநாகம் ஆர்த்தான்-கடவூர்தனுள்
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே?

[7]
அடி இரண்டு, ஓர் உடம்பு, ஐஞ்ஞான்கு-இருபதுதோள், தச-
முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும்;
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்தனுள்
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே?

[8]
வரை குடையா மழை தாங்கினானும், வளர் போதின்கண்
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான், புரிந்து ஏத்தவே,
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்தனுள்
விரை கமழ் பூம்பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே?

[9]
தேரரும், மாசு கொள் மேனியாரும், தெளியாதது ஓர்
ஆர் அருஞ்சொல் பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்;
கார் இளங் கொன்றை வெண்திங்களானும் கடவூர்தனுள்
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே?

[10]
வெந்த வெண்நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை,
அந்தணர் தம் கடவூர் உளானை, அணி காழியான்
சந்தம் எல்லாம் அடிச் சாத்த வல்ல மறை ஞானசம்-
பந்தன செந்தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.031   பொள்ளத்த காயம் ஆய பொருளினை,  
பண் - சாளரபாணி   (திருத்தலம் திருக்கடவூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு அபிராமியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருவடிகள் போற்றி )
பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர்
வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.

[1]
மண் இடைக் குரம்பைதன்னை மதித்து, நீர், மையல் எய்தில்,
விண் இடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்?
பண் இடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண் இடை மணியர்போலும், கடவூர்வீரட்டனாரே.

[2]
பொருத்திய குரம்பைதன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீா
ஒருத்தனை உணரமாட்டீர்; உள்ளத்தில் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறுதன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.

[3]
பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி,
அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே.

[4]
தலக்கமே செய்து வாழ்ந்து, தக்க ஆறு ஒன்றும் இன்றி,
விலக்குவார் இலாமையாலே, விளக்கத்தில் கோழி போன்றேன்;
மலக்குவார், மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே!

[5]
பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழி இடை வாழமாட்டேன்; மாயமும் தெளியகில்லேன்;
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்
கழி இடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே!

[6]
மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி,
பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ!
நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே!

[7]
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்;
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்;
எற்று உளேன்? என் செய்கேன், நான்? இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே!

[8]
சேலின் நேர்-அனைய கண்ணார் திறம் விட்டு, சிவனுக்கு அன்பு ஆய்,
பாலும் நல்-தயிர் நெய்யோடு பலபல ஆட்டி, என்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று
காலனை உதைப்பர் போலும்-கடவூர்வீரட்டனாரே.

[9]
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்-
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய,
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி
கந்திருவங்கள் கேட்டார்-கடவூர்வீரட்டனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.107   மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருக்கடவூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த மாணிமார்க்கண்டேயற்கு ஆய்-
இருட்டிய மேனி, வளைவாள் எயிற்று, எரி போலும் குஞ்சி,
சுருட்டிய நாவில்-வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[1]
பதத்து எழு மந்திரம் அஞ்சு எழுத்து ஓதிப் பரிவினொடும்
இதத்து எழு மாணிதன் இன் உயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்து எழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக
உதைத்து எழு சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[2]
கரப்பு உறு சிந்தையர் காண்டற்கு அரியவன்; காமனையும்
நெருப்பு உமிழ் கண்ணினன்; நீள் புனல் கங்கையும், பொங்கு அரவும்,
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்; காலனைப் பண்டு ஒரு கால்
உரப்பிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[3]
மறி(த்) திகழ் கையினன்; வானவர்கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணிதன் ஆர் உயிர் கொள்வான் கொதித்த சிந்தை,
கறுத்து எழு மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உறுக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[4]
குழை(த்) திகழ் காதினன்; வானவர்கோனைக் குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆர் உயிர் கொள்ள வந்த,
தழல் பொதி மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உழக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[5]
பாலனுக்கு ஆய் அன்று பாற்கடல் ஈந்து, பணைத்து எழுந்த
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி, அரு முனிக்கு ஆய்,-
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த
காலனைக் காய்ந்த பிரான்கடவூர் உறை உத்தமனே.

[6]
படர்சடைக் கொன்றையும், பன்னகமாலை, பணி கயிறா
உடைதலை கோத்து, உழல் மேனியன்; உண்பலிக்கு என்று உழல்வோன்;
சுடர் பொதி மூஇலைவேல் உடைக் காலனைத் துண்டம் அதா
உடறிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[7]
வெண் தலை மாலையும், கங்கை, கரோடி, விரிசடைமேல்
பெண்டு அணி நாயகன்; பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்;
கண் தனி நெற்றியன்; காலனைக் காய்ந்து, கடலின் விடம்
உண்டு அருள் செய்த பிரான்கடவூர் உறை உத்தமனே

[8]
கேழல் அது ஆகிக் கிளறிய கேசவன் காண்பு அரிது ஆய்,
வாழி நல் மா மலர்க்கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று
ஆழியும் ஈந்து(வ்), அடு திறல் காலனை அன்று அடர்த்து(வ்),
ஊழியும் ஆய பிரான்கடவூர் உறை உத்தமனே.

[9]
தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.037   மலைக் கொள் ஆனை மயக்கிய  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கடவூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு மலர்க்குழல்மின்னம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே!
கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால்,
கலைக் கையானை கண்டீர்-கடவூரரே.

[1]
வெள்ளி மால்வரை போல்வது ஓர் ஆனையார்;
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார்;
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்;
கள்ள ஆனைகண்டீர்- கடவூரரே.

[2]
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்;
ஊனை வேவ உருக்கிய ஆனையார்;
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே,
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

[3]
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்;
நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்;
கோலம் ஆய கொழுஞ் சுடர் ஆனையார்;
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

[4]
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்;
வெளுத்த நீள்கொடி ஏறு உடை ஆனையார்
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்;
களித்த ஆனைகண்டீர்-கடவூரரே.

[5]
விடுத்த மால்வரை விண் உற ஆனையார்;
தொடுத்த மால்வரை தூயது ஓர் ஆனையார்;
கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்;
கடுத்த ஆனைகண்டீர்-கடவூரரே.

[6]
மண் உளாரை மயக்கு உறும் ஆனையார்;
எண் உளார் பலர் ஏத்திடும் ஆனையார்;
விண் உளார் பலரும்(ம்) அறி ஆனையார்;
கண்ணுள் ஆனைகண்டீர்-கடவூரரே.

[7]
சினக்கும் செம்பவளத்திரள் ஆனையார்;
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்;
அனைக்கும் அன்பு உடையார் மனத்து ஆனையார்;
கனைக்கும் ஆனைகண்டீர்-கடவூரரே.

[8]
வேதம் ஆகிய வெஞ் சுடர் ஆனையார்;
நீதியால் நிலன் ஆகிய ஆனையார்;
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார்;
காதல் ஆனைகண்டீர்-கடவூரரே.

[9]
நீண்ட மாலொடு நான்முகன்தானும் ஆய்,
காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்;
காண்டல் ஆனைகண்டீர்-கடவூரரே.

[10]
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார்;
கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்;
கடுக்கை ஆனைகண்டீர்-கடவூரரே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.028   பொடி ஆர் மேனியனே! புரி  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருக்கடவூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு அபிராமியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருவடிகள் போற்றி )
பொடி ஆர் மேனியனே! புரி நூல் ஒருபால் பொருந்த,
வடி ஆர் மூ இலை வேல், வளர் கங்கை இன் மங்கையொடும்,
கடி ஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[1]
பிறை ஆரும் சடையாய்! பிரமன் தலையில் பலி கொள்
மறை ஆர் வானவனே! மறையின் பொருள் ஆனவனே!
கறை ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
இறைவா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[2]
அன்று ஆலின்(ன்) நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள் புரிந்து,
கொன்றாய், காலன்; உயிர் கொடுத்தாய், மறையோனுக்கு; மான்
கன்று ஆரும் கரவா! கடவூர்த் திரு வீரட்டத்துள்
என் தாதை! பெருமான்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[3]
போர் ஆரும் கரியின்(ன்) உரி போர்த்துப் பொன் மேனியின் மேல்,
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே!
கார் ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டானத்து
ஆரா என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[4]
மை ஆர் கண்டத்தினாய்! மதமா உரி போர்த்தவனே!
பொய்யாது என் உயிருள் புகுந்தாய்! இன்னம் போந்து அறியாய்!
கை ஆர் ஆடு அரவா! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
ஐயா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[5]
மண், நீர், தீ, வெளி, கால், வரு பூதங்கள் ஆகி, மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாய், பிறவா உரு ஆனவனே!
கண் ஆரும் மணியே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அண்ணா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[6]
எரி ஆர் புன்சடை மேல் இள நாகம் அணிந்தவனே!
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே!
கரி ஆர் ஈர் உரியாய்! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அரியாய்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[7]
வேறா உன் அடியேன், விளங்கும் குழைக் காது உடையாய்!
தேறேன், உன்னை அல்லால்; சிவனே! என் செழுஞ்சுடரே!
காறு ஆர் வெண்மருப்பா! கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஆறு ஆர் செஞ்சடையாய்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[8]
அயனோடு அன்று அரியும்(ம்) அடியும் முடி காண்பு அரிய
பயனே! எம் பரனே! பரம் ஆய பரஞ்சுடரே!
கயம் ஆரும் சடையாய்! கடவூர்த் திரு வீரட்டத்துள்
அயனே! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

[9]
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஏர் ஆரும்(ம்) இறையைத் துணையா எழில் நாவலர்கோன்-
ஆரூரன்(ன்) அடியான், அடித்தொண்டன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே.

[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam lang tamil string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D