சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.105.10   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)
பண் - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvasagam2/05.10 Thirusadhagam.mp3
8.123   மாணிக்க வாசகர்    திருவாசகம்   செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
பண் - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/23 Sethilapathhu Thiruvasagam.mp3
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,
வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;
ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.

[91]
மை இலங்கு நல் கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்ட பின், மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்;
மெய் இலங்கு வெள் நீற்று மேனியாய், மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்;
பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு, நீ போவதோ? சொலாய், பொருத்தம் ஆவதே?

[92]
பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்; போத' என்று எனைப் புரிந்து நோக்கவும்,
வருத்தம் இன்மையேன்; வஞ்சம் உண்மையேன்; மாண்டிலேன்; மலர்க் கமல பாதனே,
அரத்த மேனியாய், அருள்செய் அன்பரும், நீயும், அங்கு எழுந்தருளி, இங்கு எனை
இருத்தினாய்; முறையோ? என் எம்பிரான், வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே?

[93]
இல்லை நின் கழற்கு அன்பு அது, என்கணே; ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே!
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு, என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்;
எல்லை இல்லை நின் கருணை; எம்பிரான்! ஏது கொண்டு, நான் ஏது செய்யினும்,
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி, மீட்கவும், மறு இல் வானனே?

[94]
வான நாடரும் அறி ஒணாத நீ, மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ,
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ, என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா,
ஊனை நாடகம் ஆடுவித்தவா, உருகி, நான் உனைப் பருக வைத்தவா,
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே!

[95]
விச்சு அது இன்றியே, விளைவு செய்குவாய்; விண்ணும், மண்ணகம் முழுதும், யாவையும்,
வைச்சு வாங்குவாய்; வஞ்சகப் பெரும் புலையனேனை, உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய்; பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்; தாம் வளர்த்தது, ஓர்
நச்சு மா மரம் ஆயினும், கொலார்; நானும் அங்ஙனே, உடைய நாதனே!

[96]
உடைய நாதனே, போற்றி! நின் அலால் பற்று, மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ? பணி; போற்றி! உம்பரார் தம் பரா பரா, போற்றி! யாரினும்
கடையன் ஆயினேன்; போற்றி! என் பெரும் கருணையாளனே, போற்றி! என்னை, நின்
அடியன் ஆக்கினாய்; போற்றி! ஆதியும், அந்தம், ஆயினாய், போற்றி! அப்பனே!

[97]
அப்பனே, எனக்கு அமுதனே, ஆனந்தனே, அகம் நெக அள்ளூறு தேன்
ஒப்பனே, உனக்கு உரிய அன்பரில் உரியனாய், உனைப் பருக நின்றது ஓர்
துப்பனே, சுடர் முடியனே, துணையாளனே, தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே, எனை வைப்பதோ, சொலாய் நைய, வையகத்து, எங்கள் மன்னனே?

[98]
மன்ன, எம்பிரான், வருக' என் எனை; மாலும், நான்முகத்து ஒருவன், யாரினும்
முன்ன, எம்பிரான், வருக' என் எனை; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன, எம்பிரான், வருக' என் எனை; பெய்கழற்கண் அன்பாய், என் நாவினால்
பன்ன, எம்பிரான், வருக' என் எனை பாவநாச, நின் சீர்கள் பாடவே.

[99]
பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே பாடி, நைந்து நைந்து உருகி, நெக்கு நெக்கு,
ஆட வேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல் போது, நாயினேன்
கூட வேண்டும் நான்; போற்றி! இப் புழுக் கூடு நீக்கு எனை; போற்றி! பொய் எலாம்
வீட வேண்டும் நான்; போற்றி! வீடு தந்து அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[100]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.123   செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்  
பண் - ஹரிவராசனம்   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எண்சீர் விருத்தம்
பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும், புது மலர்க் கழல் இணை அடிபிரிந்தும்,
கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்.
ஐயனே! அரசே! அருள் பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச்
செய்ய மேனியனே! செய்வகை அறியேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[1]
புற்றும் ஆய், மரம் ஆய்; புனல், காலே, உண்டி, ஆய்; அண்ட வாணரும், பிறரும்,
மற்று யாரும், நின் மலர் அடி காணா மன்ன! என்னை ஓர் வார்த்தையுள் படுத்து,
பற்றினாய்; பதையேன்; மனம் மிக உருகேன்; பரிகிலேன்; பரியா உடல் தன்னைச்
செற்றிலேன்; இன்னும் திரிதருகின்றேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[2]
புலையனேனையும், பொருள் என நினைந்து, உன் அருள் புரிந்தனை; புரிதலும்,களித்துத்
தலையினால் நடந்தேன்; விடைப் பாகா! சங்கரா! எண் இல் வானவர்க்கு எல்லாம்
நிலையனே! அலை நீர் விடம் உண்ட நித்தனே! அடையார் புரம் எரித்த
சிலையனே! எனைச் செத்திடப் பணியாய்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[3]
அன்பர் ஆகி, மற்று, அரும் தவம் முயல்வார், அயனும், மாலும்; மற்று, அழல் உறுமெழுகு ஆம்
என்பர் ஆய், நினைவார் எனைப் பலர்; நிற்க இங்கு, எனை, எற்றினுக்கு ஆண்டாய்?
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை; மரக் கண்; என் செவி இரும்பினும் வலிது;
தென் பராய்த்துறையாய்! சிவலோகா! திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[4]
ஆட்டுத் தேவர் தம் விதி ஒழித்து, அன்பால், ஐயனே' என்று, உன் அருள் வழி இருப்பேன்;
நாட்டுத் தேவரும் நாடு அரும் பொருளே! நாதனே! உனைப் பிரிவு உறா அருளைக்
காட்டி, தேவ, நின் கழல் இணை காட்டி, காய மாயத்தைக் கழித்து, அருள்செய்யாய்;
சேட்டைத் தேவர் தம் தேவர் பிரானே! திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[5]
அறுக்கிலேன் உடல் துணிபட; தீப் புக்கு ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்;
பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்; போற்றி! போற்றி! என் போர் விடைப் பாகா!
இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க, என் செய்கேன்? இது செய்க' என்றுஅருளாய்;
சிறைக்கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[6]
மாயனே! மறி கடல் விடம் உண்ட வானவா! மணி கண்டத்து எம் அமுதே!
நாயினேன், உனை நினையவும் மாட்டேன்; நமச்சிவாய' என்று, உன் அடி பணியாப்
பேயன் ஆகிலும், பெரு நெறி காட்டாய்; பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே! ஓ!
சேயன் ஆகி நின்று, அலறுவது அழகோ? திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[7]
போது சேர் அயன், பொரு கடல் கிடந்தோன், புரந்தர ஆதிகள், நிற்க, மற்றுஎன்னைக்
கோது மாட்டி, நின் குரை கழல் காட்டி, குறிக்கொள்க' என்று, நின் தொண்டரில்கூட்டாய்;
யாது செய்வது, என்று இருந்தனன்; மருந்தே! அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ?
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[8]
ஞாலம், இந்திரன், நான்முகன், வானோர், நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்;
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய்! கங்கையாய்! அங்கி தங்கிய கையாய்!
மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே, மரக்கணேனையும் வந்திடப் பணியாய்;
சேலும், நீலமும், நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[9]
அளித்து வந்து, எனக்கு ஆவ' என்று அருளி, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில்,
திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!
வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா!
களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே!

[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name pann lang tamil string value %E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D