சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை pann பூவேறு கோனும் புரந்தரனும்
8.110   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/10 Thirukothumbi Thiruvasagam.mp3
8.111   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvasagam2/11 Thiruthellaenam.mp3
8.112   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/12 Thiruchalal Thiruvasagam.mp3
8.113   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பூவல்லி - இணையார் திருவடி
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/13 Thirupoouvalli Thiruvasagam.mp3
8.115   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/15 Thiruthonokkam Thiruvasagam.mp3
8.131   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/31 Kandapathu Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/31 Kanda pathu.mp3
8.138   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/38 Thiruvesaravu Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.110   திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
சிவனோடு ஐக்கியம்; உயிரானது தேனீயை இறைவனிடம் தூது அனுப்பி, தன்னிடம் வரச் சொல்லி கேட்கும் பதிகம்
பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும்,
மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச்
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[1]
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[2]
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[3]
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[4]
அத் தேவர் தேவர்; அவர் தேவர்;' என்று, இங்ஙன்,
பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே,
பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற
மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[5]
வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்
பித்த உலகில், பிறப்போடு இறப்பு, என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[6]
சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனை,
கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்;
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[7]
ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு,
நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த
என் தாதை; தாதைக்கும், எம் அனைக்கும், தம் பெருமான்!
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[8]
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே, தான் எனக்கு
மரணம், பிறப்பு, என்று, இவை இரண்டின் மயக்கு அறுத்த
கருணைக் கடலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[9]
நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து,
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம்,
தாய் உற்று வந்து, என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத்
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[10]
வல் நெஞ்சக் கள்வன், மன வலியன்,' என்னாதே,
கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட,
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன்
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[11]
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை,
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை,
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[12]
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்;
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்;
ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே
கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!

[13]
கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப் புறத்தே
மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி,
அரு ஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[14]
நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம்
தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்?
வானும், திசைகளும், மா கடலும், ஆய பிரான்
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[15]
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்,
கள்ளப்படாத களிவந்த வான் கருணை
வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட்
கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[16]
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட
ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[17]
தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும்;
பால் வெள்ளை நீறும், பசும் சாந்தும்; பைங் கிளியும்,
சூலமும்; தொக்க வளையும்; உடைத் தொன்மைக்
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!

[18]
கள்வன், கடியன், கலதி, இவன்' என்னாதே,
வள்ளல், வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே;
உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம்
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[19]
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க,
நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த
தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.111   திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
சிவனோடு அடைவு; கைதட்டி, பாடி, ஆடி இறைவனைப் போற்றும் பதிகம்
திருமாலும் | பன்றியாய்ச் | சென்று உணராத் | திருவடியை,
உரு நாம் | அறிய, ஓர் | அந்தணன் ஆய், | ஆண்டுகொண்டான்;
ஒரு நாமம், | ஓர் உருவம், | ஒன்றும் இல்லாற்கு,| ஆயிரம்
திருநாமம் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[1]
திரு ஆர் | பெருந்துறை | மேய பிரான் | என் பிறவிக்
கரு வேர் | அறுத்தபின், | யாவரையும் | கண்டது இல்லை;
அரு ஆய்,| உருவமும் | ஆய பிரான், | அவன் மருவும்
திருவாரூர் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[2]
அரிக்கும்,| பிரமற்கும்,| அல்லாத |தேவர்கட்கும்,
தெரிக்கும் | படித்து அன்றி | நின்ற சிவம், | வந்து, நம்மை
உருக்கும், | பணி கொள்ளும், | என்பது கேட்டு, | உலகம் எல்லாம்
சிரிக்கும் | திறம் பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[3]
அவம் ஆய | தேவர் | அவ கதியில் | அழுந்தாமே
பவ மாயம் | காத்து, என்னை | ஆண்டுகொண்ட | பரஞ்சோதி
நவம் ஆய | செம் சுடர் | நல்குதலும், | நாம் ஒழிந்து,
சிவம் ஆன | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[4]
அருமந்த | தேவர், | அயன், திருமாற்கு, | அரிய சிவம்
உருவந்து, | பூதலத்தோர் | உகப்பு எய்த, | கொண்டருளி,
கரு வெந்து | வீழக் | கடைக்கணித்து, என் | உளம் புகுந்த
திரு வந்த | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[5]
அரை ஆடு | நாகம் | அசைத்த பிரான், | அவனியின்மேல்,
வரை ஆடு | மங்கை தன் | பங்கொடும், வந்து, | ஆண்ட திறம்
உரை ஆட, | உள் ஒளி ஆட, | ஒள் மா மலர்க் | கண்களில் நீர்
திரை ஆடு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[6]
ஆ! ஆ! | அரி, அயன், | இந்திரன், வானோர்க்கு, | அரிய சிவன்,
வா, வா| என்று, என்னையும் | பூதலத்தே |வலிந்து ஆண்டுகொண்டான்;
பூ ஆர் | அடிச் சுவடு | என் தலைமேல் | பொறித்தலுமே,
தே ஆன | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[7]
கறங்கு ஓலை | போல்வதுஓர் | காயப் பிறப்போடு | இறப்பு என்னும்,
அறம், பாவம், | என்று இரண்டு | அச்சம் தவிர்த்து, என்னை | ஆண்டுகொண்டான்;
மறந்தேயும் | தன் கழல் நான் | மறவாவண்ணம் | நல்கிய, அத்
திறம் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[8]
கல் நார் | உரித்து என்ன, | என்னையும் | தன் கருணையினால்
பொன் ஆர் | கழல் பணித்து, | ஆண்ட பிரான் | புகழ் பாடி,
மின் நேர் | நுடங்கு இடை, | செம் துவர் வாய், | வெள் நகையீர்!
தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ!

[9]
கனவேயும் | தேவர்கள் | காண்பு அரிய | கனை கழலோன்
புன வேய் | அன வளைத் | தோளியொடும் | புகுந்தருளி,
நனவே | எனைப் பிடித்து, ஆட்கொண்டவா | நயந்து, நெஞ்சம்,
சின வேல் கண் | நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ!

[10]
கயல் மாண்ட | கண்ணி தன் | பங்கன் எனைக் | கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, | அருவினைச் | சுற்றமும் மாண்டு, | அவனியின்மேல்
மயல் மாண்டு, | மற்று உள்ள | வாசகம் மாண்டு, | என்னுடைய
செயல் மாண்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[11]
முத்திக்கு | உழன்று | முனிவர் குழாம் | நனி வாட,
அத்திக்கு | அருளி, | அடியேனை | ஆண்டுகொண்டு,
பத்திக் | கடலுள் | பதித்த | பரஞ்சோதி,
தித்திக்கு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[12]
பார் பாடும், | பாதாளர் | பாடும், விண்ணோர் | தம் பாடும்,
ஆர் பாடும், | சாரா | வகை அருளி, | ஆண்டுகொண்ட
நேர் பாடல் | பாடி, | நினைப்பு அரிய | தனிப் பெரியோன்
சீர் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[13]
மாலே, | பிரமனே, மற்று ஒழிந்த | தேவர்களே,
நூலே, | நுழைவுஅரிய | நுண்ணியன் ஆய், | வந்து, அடியேன்
பாலே | புகுந்து, | பரிந்து உருக்கும் | பாவகத்தால்,
சேல் ஏர் | கண் நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ!

[14]
உருகிப் | பெருகி, | உளம் குளிர | முகந்துகொண்டு,
பருகற்கு | இனிய | பரம் கருணைத் | தடம் கடலை
மருவி, | திகழ் தென்னன் | வார் கழலே | நினைந்து, அடியோம்
திருவைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[15]
புத்தன், | புரந்தர ஆதியர், | அயன், மால், | போற்றி செயும்
பித்தன்; | பெருந்துறை | மேய பிரான்; | பிறப்பு அறுத்த
அத்தன்; | அணி தில்லை | அம்பலவன்; | அருள் கழல்கள்
சித்தம் | புகுந்தவா | தெள்ளேணம் | கொட்டாமோ!

[16]
உவலைச் | சமயங்கள், | ஒவ்வாத | சாத்திரம், ஆம்
சவலைக் | கடல் உளனாய்க் | கிடந்து, | தடுமாறும்
கவலைக் | கெடுத்து, | கழல் இணைகள் | தந்தருளும்
செயலைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[17]
வான் கெட்டு | மாருதம் | மாய்ந்து, அழல், நீர், | மண், கெடினும்,
தான் கெட்டல் | இன்றி, | சலிப்பு அறியாத் | தன்மையனுக்கு,
ஊன் கெட்டு, | உயிர் கெட்டு, | உணர்வு கெட்டு, என் | உள்ளமும் போய்,
நான் கெட்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[18]
விண்ணோர் | முழு முதல்; | பாதாளத் | தார் வித்து;
மண்ணோர் | மருந்து; அயன், | மால், உடைய | வைப்பு; அடியோம்
கண் ஆர, | வந்துநின்றான்; | கருணைக் | கழல் பாடி,
தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ!

[19]
குலம் பாடி | , கொக்கு இறகும் | பாடி, | கோல் வளையாள்
நலம் பாடி, | நஞ்சு உண்ட | வா பாடி, | நாள்தோறும்
அலம்பு ஆர் | புனல் தில்லை | அம்பலத்தே | ஆடுகின்ற
சிலம்பு ஆடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.112   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
சிவனுடைய காருணியம்; ஒருவர் இறைவனை விமர்சிக்க, மற்றொருவர் அவனைப் போற்றி பதிலளிக்கும் பதிகம்
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,
பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!
பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?
ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!

[1]
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்;
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ!
மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா,
தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!

[2]
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை,
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ!
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன்; ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!

[3]
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை,
வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ!
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்,
சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ!

[4]
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம்
தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ!
தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு
எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!

[5]
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய்,
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ!
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம்
சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!

[6]
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ
சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!

[7]
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!

[8]
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ!
பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர்
விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!

[9]
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ!
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள்,
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!

[10]
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து,
கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ!
கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர்
தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!

[11]
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி;
ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ!
ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும்,
வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!

[12]
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை
உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ
உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்,
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!

[13]
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்,
தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ!
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம்,
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!

[14]
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!

[15]
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ!
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும்,
கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!

[16]
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ!
நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா,
எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!

[17]
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ்
அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!

[18]
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்;
எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ!
எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்,
தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!

[19]
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும்
இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்,
திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.113   திருப்பூவல்லி - இணையார் திருவடி  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
மாய விசயம் நீக்குதல்; இறைவனுக்காக பூக்களைப் பறித்து அவனைப் போற்றும் பதிகம்
இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே,
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்;
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ!

[1]
எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய
பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்;
அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[2]
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து,
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்,
மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின்
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ!

[3]
பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே,
எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல்,
விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[4]
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே
நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ!

[5]
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி,
சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி,
உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ!

[6]
வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து;
இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான்,
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற
குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[7]
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி,
முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக்
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[8]
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய்,
கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[9]
பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான்,
சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி,
போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ!

[10]
பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய்,
கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ!

[11]
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன்
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய,
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ!

[12]
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி,
நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும்,
நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப்
பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[13]
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு
இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான்,
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா,
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ!

[14]
அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன்,
செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும்,
பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய,
பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[15]
திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு,
மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி,
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட,
புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[16]
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும்,
பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே?
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[17]
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ,
தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!

[18]
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான்,
பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய்,
முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல்,
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ!

[19]
மா ஆர வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலத் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.115   திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
பிரபஞ்ச சுத்தி; அண்டத்தில் உள்ள ஐம்பூதங்களும் பிண்டத்தில் உள்ளவாறு, உயிரை தூய்மைப்படுத்தி, தில்லை அம்பலவாணரின் சிவத்தன்மையை உணர்த்தி, பிறவி பிணியை நீக்கும் ஆன்மீகத் தத்துவத்தை விளக்கும் பதிகம்
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி,
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே,
தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்
கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!

[1]
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்;
கன்றால் விளவு எறிந்தான், பிரமன், காண்பு அரிய
குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்; குணம் பரவி,
துன்று ஆர் குழலினீர்! தோள் நோக்கம் ஆடாமோ!

[2]
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க,
செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம்,
விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு,
அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[3]
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால்
நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி,
நல் பால் படுத்து என்னை, நாடு அறியத் தான் இங்ஙன்,
சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ!

[4]
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலா, பகலோன்,
புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்;
உலகு ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே
பல ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[5]
புத்தன் முதல் ஆய புல் அறிவின் பல் சமயம்,
தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்க,
சித்தம் சிவம் ஆக்கி, செய்தனவே தவம் ஆக்கும்
அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ!

[6]
தீது இல்லை மாணி, சிவ கருமம் சிதைத்தானை,
சாதியும் வேதியன், தாதை தனை, தாள் இரண்டும்
சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழ,
பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்!

[7]
மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கைநல்லீர்!
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம்,
ஆனந்தக் கூத்தன் அருள் பெறின், நாம் அவ்வணமே
ஆனந்தம் ஆகி, நின்று ஆடாமோ தோள் நோக்கம்!

[8]
எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி பிழைத்து,
கண் நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன் பின்,
எண் இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும்,
மண்மிசை மால் பலர், மாண்டனர்; காண் தோள் நோக்கம்!

[9]
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக் குறைய,
தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே,
சங்கரன், எம் பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு,
எங்கும் பரவி, நாம் தோள் நோக்கம் ஆடாமோ!

[10]
காமன் உடல்; உயிர், காலன்; பல், காய் கதிரோன்;
நா மகள் நாசி; சிரம், பிரமன்; கரம், எரியை;
சோமன் கலை; தலை தக்கனையும், எச்சனையும்;
தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ!

[11]
பிரமன், அரி, என்ற இருவரும், தம் பேதைமையால்
பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்க,
அரனார், அழல் உரு ஆய், அங்கே, அளவு இறந்து,
பரம் ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[12]
ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம்,
பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே;
ஊழி முதல், சிந்தாத நல் மணி, வந்து, என் பிறவித்
தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ!

[13]
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும்,
கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே,
இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓட,
துரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ!
. திருப்பொன் ஊசல்

[14]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.131   கண்டபத்து - இந்திரிய வயமயங்கி  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
நிருத்த தரிசனம் ; இறைவனின் அருட்கூத்தைத் தரிசித்து, சிந்தை தெளிவுபெற்று, சிவமயமான நிலையை அடையும் அனுபவத்தைக் குறிக்கும் பாடல்
இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய்,
அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச்
சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே!

[1]
வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு,
தனைச் சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை,
எனைப் பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!

[2]
உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி,
கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!

[3]
கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை,
வல்லாளன் ஆய் வந்து, வனப்பு எய்தி இருக்கும்வண்ணம்,
பல்லோரும் காண, என்தன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே!

[4]
சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை, அல்லல் அறுத்து; ஆட்கொண்டு;
பேதை குணம், பிறர் உருவம், யான், எனது, என் உரை, மாய்த்து;
கோது இல் அமுது ஆனானை குலாவு தில்லைக் கண்டேனே!

[5]
பிறவி தனை அற மாற்றி; பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும்,
உறவினொடும், ஒழியச் சென்று; உலகு உடைய ஒரு முதலை
செறி பொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி,
மறையவரும், வானவரும், வணங்கிட நான் கண்டேனே!

[6]
பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி,
பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்து, பேராமே,
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!

[7]
அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு, இங்கு, அறிவு இன்றி,
விளைவு ஒன்றும் அறியாதே, வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவு இலா ஆனந்தம் அளித்து, என்னை ஆண்டானை
களவு இலா வானவரும் தொழும் தில்லைக் கண்டேனே!

[8]
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை,
ஓங்கி, உளத்து, ஒளி வளர; உலப்பு இலா அன்பு அருளி;
வாங்கி, வினை; மலம் அறுத்து; வான் கருணை தந்தானை
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே!

[9]
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொருள் ஆகி,
பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை,
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.138   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கொச்சகக்கலிப்பா
சுட்டறிவு ஒழித்தல்; உயிரானது தனது தனிப்பட்ட அறிவு ஒழித்து, இறைவனின் பேரருளில் மூழ்கி, நான், எனது என்ற ஆணவத்தை முழுமையாக விட்டு, இறைவனுடன் கலக்க விரும்பும் நிலையைக் குறிக்கிறது. இரும்பை ஈர்ப்பது போல இறைவன் தன் மனதை ஈர்த்து, தன்னை ஆட்கொண்டதை உணர்ந்து உருகு
இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி,
கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்;
ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம்
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே!

[1]
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு
உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா' என்ன;
கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!

[2]
ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில்,
ஆர் தமரும் இன்றியே, அழுந்துவேற்கு, ஆ! ஆ!' என்று,
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம் பரனே!

[3]
பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர் சடையாய்! பாத மலர்
உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக்கொண்டு,
எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என்
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே, உன் திறம் நினைந்தே!

[4]
கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும்,
மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து
உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!

[5]
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு,
நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால்
உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை,
அஞ்சேல்,' என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே!

[6]
என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா,
தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்,
அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது,
என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே!

[7]
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா
ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால்
பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே!

[8]
மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,
தெருவுதொறும் மிக அலறி, சிவபெருமான்' என்று ஏத்தி,
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு,
அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!

[9]
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000