சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
திருப்பல்லாண்டு -  

Songs from 1.0 to 12.0   ( திருவில்லிபுத்தூர் )
முதல் ஆயிரம்   ஆண்டாள்  
திருப்பாவை -  

Songs from 474.0 to 503.0   ( திருவில்லிபுத்தூர் )
முதல் ஆயிரம்   திருமழிசை ஆழ்வார்  
திருச்சந்த விருத்தம் -  

Songs from 752.0 to 871.0   ( )
முதல் ஆயிரம்   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்  
திருமாலை -  

Songs from 872.0 to 916.0   ( )
முதல் ஆயிரம்   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்  
திருப்பள்ளி எழுச்சி -  

Songs from 917.0 to 926.0   ( )
முதல் ஆயிரம்   திருப்பாணாழ்வார்  
அமலன் ஆதிபிரான் -  

Songs from 927.0 to 936.0   ( உறையூர் )
முதல் ஆயிரம்   மதுரகவி ஆழ்வார்  
கண்ணி நுண் சிறுத்தாம்பு -  

Songs from 937.0 to 947.0   ( )
(937.0)    
Pages:    1    2  3  Next
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.



[1.0]
அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே



[2.0]
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து
மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினிற் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்
இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே



[3.0]
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ
நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து
பல்லாண்டு கூறுமினே



[4.0]
Go to Top
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
லாயிரத்தாண்டு என்மினே



[5.0]
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டு என்று பாடுதுமே



[6.0]
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே



[7.0]
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை
வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே



[8.0]
Go to Top
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே



[9.0]
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
யோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையிற்
சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப்
பல்லாண்டு கூறுதுமே



[10.0]
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
பல்லாண்டு கூறுவனே



[11.0]
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
மேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
சித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
ஏத்துவர் பல்லாண்டே



[12.0]
Go to Top
Audio: https://www.youtube.com/watch?v=PxeeauHz5CQ
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய்



[474.0]
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையிற் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்



[475.0]
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய்



[476.0]
Go to Top
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்



[477.0]
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்



[478.0]
புள்ளும் சிலம்பின காண் புள்-அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர்-அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்



[479.0]
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு- அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர்-அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்



[480.0]
Go to Top
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள்- ஏலோர் எம்பாவாய்



[481.0]
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்



[482.0]
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய்



[483.0]
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்



[484.0]
Go to Top
கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய்



[485.0]
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்



[486.0]
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்
தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்



[487.0]
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்



[488.0]
Go to Top
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்



[489.0]
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய்



[490.0]
உந்து மத களிற்றன் ஓடாத தோள்-வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தர்மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்



[491.0]
குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவு-ஏலோர் எம்பாவாய்



[492.0]
Go to Top
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்



[493.0]
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து-ஏலோர் எம்பாவாய்



[494.0]
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்து-ஏலோர் எம்பாவாய்



[495.0]
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய்



[496.0]
Go to Top
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு-ஏலோர் எம்பாவாய்



[497.0]
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்



[498.0]
மாலே மணிவண்ணா மார்கழி நீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள்-ஏலோர் எம்பாவாய்



[499.0]
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்



[500.0]
Go to Top
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறை- ஏலோர் எம்பாவாய்



[501.0]
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய்



[502.0]
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள்-திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்குப் பறைகொண்ட-ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்



[503.0]
பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?



[752.0]
Go to Top
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய ஆய மாயனே



[753.0]
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய்
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே?



[754.0]
மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம் இல் விளக்கமாய்
ஏன்று என் ஆவியுள்புகுந்தது என் கொலோ? எம் ஈசனே



[755.0]
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள்கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று
என்றும் யார்க்கும் எண் இறந்த ஆதியாய் நின் உந்திவாய்
அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் அல்லையே?



[756.0]
Go to Top
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே



[757.0]
ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே
ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே?



[758.0]
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ
ஆதி ஆன வான வாணர் அந்த-காலம் நீ உரைத்தி
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே



[759.0]
தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே



[760.0]
Go to Top
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே



[761.0]
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?



[762.0]
உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகுதன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே?



[763.0]
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே?



[764.0]
Go to Top
தூய்மை யோகம் ஆயினாய் துழாய்-அலங்கல் மாலையாய்
ஆமை ஆகி ஆழ்கடற் துயின்ற ஆதிதேவ நின்
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும்
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே?



[765.0]
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடங்கடற் பணத்தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே?



[766.0]
தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலைக் கணங்கள் சொற் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்தன் மாட்சியே



[767.0]
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங் கடற் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே



[768.0]
Go to Top
விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ-நீர் அராவணைப்
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்கொல் வேலைவண்ணனே



[769.0]
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புட் கொடிப் பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே?



[770.0]
கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை-நீர்
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே



[771.0]
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ்
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்தபோது நின்ற சூரர் என் செய்தார்?
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே



[772.0]
Go to Top
பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலனாகி ஞாலம் ஏழ்
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதிதேவனே
வண்டு கிண்டு தண் துழாய்-அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரும் மார்ப பூமிநாதனே



[773.0]
வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள்-எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர்த்தலம் அழுத்தினாய் உலாய சீர்
நால்-நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு
பால்-நிறக் கடற்கிடந்த பற்பநாபன் அல்லையே?



[774.0]
கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர்-
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே



[775.0]
வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்
உரத்தினிற் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ-இது என்ன பொய்?-இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே



[776.0]
Go to Top
ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய்
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே



[777.0]
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே?



[778.0]
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன்-ஊர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே



[779.0]
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணைக் கிடந்து
உரத்திலும் ஒருத்திதன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே?



[780.0]
Go to Top
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்
கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?



[781.0]
காலநேமி காலனே கணக்கு இலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே



[782.0]
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கு அரங்க வெஞ்சரம் துரந்த ஆதி நீ
இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே?



[783.0]
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்
நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே?



[784.0]
Go to Top
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே?



[785.0]
அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார்
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர்-மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ? எம் ஈசனே



[786.0]
ஆடகத்த பூண்-முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து
ஆடகக் கை மாதர் வாய்-அமுதம் உண்டது என்கொலோ?



[787.0]
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங் குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத் தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா



[788.0]
Go to Top
கடம் கலந்த வன்கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்வண்ண தண்துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே



[789.0]
வெற்பு எடுத்து வேலை-நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை-நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே?



[790.0]
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர்-பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆனெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக் கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே



[791.0]
ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?
மாய மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே



[792.0]
Go to Top
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன்சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன்கபால் மிசை
ஊறு செங் குருதியால் நிறைத்த காரணந்தனை
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே



[793.0]
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?



[794.0]
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து வண்டு விண்டு உலாம்
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே?



[795.0]
மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல்? என்ன மாயை நின் தமர்
கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன்மேல் கிடந்த எம்
புண்ணியா புனந்துழாய்-அலங்கல் அம் புனிதனே



[796.0]
Go to Top
தோடு பெற்ற தண் துழாய்-அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப் புள் ஊர்தியால்
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே



[797.0]
காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீர் இடத்து அராவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்வு-இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே



[798.0]
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடற் கிடந்து மண்
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாளவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த ஆதிதேவன் அல்லையே?



[799.0]
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அந் தண் நீர் அரங்கமே



[800.0]
Go to Top
வெண் திரைக் கருங் கடல் சிவந்து வேவ முன் ஒர் நாள்
திண் திறற் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே



[801.0]
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே



[802.0]
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே



[803.0]
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரங் கழித்த ஆதி மால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே



[804.0]
Go to Top
இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்
மலைத் தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே



[805.0]
மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே?



[806.0]
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உக
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?



[807.0]
சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே



[808.0]
Go to Top
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?



[809.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 06 Aug 2026 02:15:30 +0000  
   

send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group